Tuesday, June 15, 2010

ஈவ்..



விடுமுறைக்கு அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தாள் மாலதி. அக்கா பிரபா, சென்னையில் கணவருடன் சமீபத்தில் குடி பெயர்ந்திருந்தாள். அத்தான் பத்திரிகையாளர்.

"என்னடி ஒரு மாதிரியா இருக்கே?"

"அது ஒன்னும் இல்லக்கா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு போன் கால். எவனோ ஒருத்தன் என் பேரெல்லாம் கரெக்டா சொன்னான். அசிங்க அசிங்கமா பேசினான். நான் உடனே வெச்சுட்டேன். திரும்ப ரெண்டு மூணு தடவ கால் பண்ணான். அப்பறம் நான் அந்த நம்பர பிளாக் பண்ணிட்டேன். யாரா இருக்கும்னு தெரில." என்றாள் மாலதி.

"நம்பர பிளாக் பண்ணிடல்ல. இனி தொந்தரவு இருக்காது. இன்னொரு தடவ அந்த மாதிரி நடந்தா உடனே சொல்லு புகார் குடுத்துரலாம். புறப்படு. இன்னக்கி பாண்டிச்சேரி போறோம். மறந்து போச்சா."

"இதோ அஞ்சு நிமிஷம். ரெடி அய்டறேன்."

காலையே பாண்டிச்சேரி சென்று ஊர் சுற்றினார்கள். அத்தான் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பட்டியல் இட்டு திட்டம் வகுத்திருந்ததால் பயணம் மாலதிக்கு இனிமையாக இருந்தது.

சென்னைக்கு திரும்புகையில் அத்தான் உறங்கி விட்டார். மாலதி அக்காவுடன் பேசிக்கொண்டே கார் ஓட்டினாள். தூக்கத்தில் அத்தான் அவ்வப்பொழுது பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்தான் அவ்வப்பொழுது ப்ரக்ஸிசம் (Bruxism) ஆல் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொள்வதாகவும் அக்கா கூறினாள்.

அடுத்த நாள் கோவையில் அவசர வேலை இருப்பதாக கூறி அக்காவிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் மாலதி.

இரவு பிரபா தொலைபேசியில் அழைத்திருந்தாள். நலம் விசாரித்தாள். "உன் அத்தானோட கட்டுரை இன்னக்கி பத்திரிக்கைல வந்திருக்கு பாரு." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். மாலதி வாசிக்க மனமில்லாமல் பத்திரிக்கையை புரட்டினாள். "ஈவ் டீசிங்" பற்றி அத்தான் அருமையாக எழுதியிருந்தார். தன்னிடம் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடியவன் அவ்வப்பொழுது பல்லை கடித்துக் கொண்டதை மாலதியால் மறக்க முடியவில்லை.

5 comments:

Cable Sankar said...

அந்த வியாதி மேட்டர் புதுசு.. ஆனா அத்தானோட குரல் தெரியலைங்கிறது.. லாஜிக் இடிக்குதே..

Arun Bharath said...

@Cable Sankar : கருத்துக்கு நன்றிங்க. நிறைய விஷயங்களை நான் வெளிப்படையாக கூறவில்லை. அத்தான் குரலை மாற்றி பேசினார் என்ற ஒரு அனுமானத்தில் (Assumption) தான் எழுதியிருக்கிறேன். மேலும் அந்த வியாதி இருப்பவர்களால் பல்லைக் கடிப்பதை கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு அப்பொழுது வியாதி ஆரம்ப நிலையில் இருக்கிறது. சரியாக தொலைபேசியில் பேசும் பொழுது வந்ததால் மாட்டிக்கொண்டார் என்று சொல்லலாம்.

இக்கதையை நான் கச்சிதமாக முடிக்கவில்லை. சில அனுமானங்களை தவிர்த்திருந்தால் வாசகர்களுக்கு குழப்பம் நேரிட்டிருக்காது. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. அடுத்த முறை இவை வராமல் பார்த்துக்கொள்கிறேன்.

Vishravars said...

நல்ல கற்பனை. எளிதாக சுத்தி வளைக்காமல் எழுத்து. ஒரு புதிய தகவல்

Sid said...

Arun, I knew that it was the brother in law the moment you started talking about him (in the second or third para) :)

சதுக்க பூதம். (Downtown Demigod) said...

cliched plot..உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்கின்றேன்..